தமிழக செய்திகள்

‘பி.எம்.ஸ்ரீ' பள்ளித்திட்டத்தில் கையெழுத்திட மத்திய அரசு மீண்டும் ‘கெடு’- புதிய அரசுக்கு முதல் சவால்

'பி.எம்.ஸ்ரீ' பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருக்கிறது.

புதுடெல்லி,

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், 'பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் பார் ரைசிங் இந்தியா' (பி.எம்.ஸ்ரீ) திட்டம் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தேசியக்கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இருப்பதால், தி.மு.க. தலைமையிலான கடந்த அரசாங்கம் ஏற்கனவே பின்பற்றி வரும் இருமொழிக்கொள்கையே போதும் என சொல்லி இந்த திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது. இந்த திட்டத்தில் இணைய மறுத்ததன் விளைவாக, மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட கல்வி நிதிக்காக ஒதுக்கும் ரூ.3,500 கோடியை தமிழக அரசுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்தது.

இந்த விவகாரம் கடந்த தி.மு.க. ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்தது. நீங்கள் பணம் தராவிட்டால் என்ன? நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவோம் என அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இது மக்களவையில் கூட எதிரொலித்தது.

இந்த சூழ்நிலையில், தற்போது மத்திய அரசு மீண்டும் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் 'பி.எம்.ஸ்ரீ' பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்க இருக்கும் சூழலில் மத்திய அரசு இந்த கடிதத்தை எழுதியுள்ளது.

புதிய அரசாங்கம் இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறது? கடந்த தி.மு.க. அரசு கையாண்ட வழியிலேயே கையாளுமா? அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திட முனைப்பு காட்டுமா?, நிறுத்தி வைக்கப்பட்ட கல்விக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பன போன்றவை பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்

புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் 'பி.எம்.ஸ்ரீ' பள்ளித்திட்டத்தில் கையெழுத்திட மத்திய அரசு கெடு விதித்துள்ள சூழலில், இது புதிய அரசாங்கத்துக்கு காத்திருக்கும் முதல் சவாலாக இருக்கப்போகிறது. அதேநேரம், புதிய அரசை அமைக்க முனைப்பு காட்டிவரும் த.வெ.க. தலைமை, தன்னுடைய தேர்தல் அறிக்கையில், 'மத்திய அரசின் புதிய கல் விக்கொள்கையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழி மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள் கையை நிறைவேற்ற வலியுறுத்தப்படும்' என்று தெரிவித்து இருந்தது.

அதன்படி பார்க்கையில், புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படும் 'பி.எம்.ஸ்ரீ' பள்ளித்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதிய அரசாங்கம் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லப்படுகிறது. இதற்கிடையில், புதிய அரசாங்கத்தை அமைக்க தீவிரம் காட்டி வரும் த.வெ.க., கல்வித்துறையிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள். அதனால் பயன் பெற்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.