சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்த மறுப்பதைக் காரணமாக கொண்டு தமிழகத்தின் பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாட்டின் மொழி மற்றும் கல்வி அமைப்பில் ஒரே மாதிரியான கட்டுப்பாட்டை திணிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, 3 மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்படுவது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாகும்.
தமிழகம் என்பது மொழி, பண்பு, கலாசாரம் ஆகியவற்றை உயிராகக் காக்கும் மண். தமிழ் மொழிக்காக எண்ணற்ற போராட்டங்களையும் தியாகங்களையும் செய்த வரலாறு கொண்ட மாநிலத்தில் எந்த வடிவிலும் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் பெயரில் இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாக கைவிட்டு, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை மதித்து செயல்பட வேண்டும். அதேபோல், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து கல்வி மற்றும் வளர்ச்சி நிதிகளையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ் மொழியின் உரிமை, தமிழர் பண்பாடு மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாக்க தமிழக மக்கள் என்றும் உறுதியாக குரல் கொடுப்பார்கள்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.