தமிழக செய்திகள்

மத்திய அரசின் புதிய பி.எட். படிப்பு: தமிழக அரசின் முடிவு என்ன?

தமிழ்நாட்டில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், மத்திய அரசின் புதிய பி.எட். படிப்பு குறித்து ஆட்சியாளர்கள் எந்த முடிவையும் எடுத்து அறிவிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில், 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட்., பி.ஏ. பி.எட். படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்கு மாற்றாக, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், தேசிய கல்விக்கொள்கை 2020-ன்படி, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் எனும் ஐ.டி.இ.பி. திட்டம் புதிதாக செயல்படுத்தும் என அறிவித்தது. இந்த புதிய கல்வி திட்டத்தை ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் 2026-2027-ம் கல்வியாண்டு முதல் செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதனால் வரும் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த பி.எஸ்சி. பி.எட்., பி.ஏ. பி.எட். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில், மத்திய அரசு கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காது என ஏற்கனவே கூறிவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், ஆட்சியாளர்கள் எந்த முடிவையும் எடுத்து அறிவிக்க முடியாது, என்ன முடிவு எடுக்க என்று கல்வித்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் 4 நிலைகளைக் கொண்டதாக இருக்கிறது. அதாவது அடித்தள நிலை, ஆயத்த நிலை, இடைநிலை, முதன்மை நிலை என உள்ளது. அதில் எந்த நிலைகளில் இருந்து வேண்டுமானாலும் மாணவர்கள் வெளியேறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அடித்தள நிலையுடன் நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சான்றிதழ், ஆயத்த நிலையுடன் வெளியேறும் மாணவர்களுக்கு டிப்ளமோ, இடைநிலையுடன் நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பு (டிகிரி) சான்றிதழ், முதன்மை நிலையை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு இரட்டை பட்டப்படிப்பு (டபுள் டிகிரி) சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இவை அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமாக இருப்பதால், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது.