தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் தனது தோழமைக் கட்சியிடம் பேசி தமிழகத்தின் உரிமைகளைப் பெற வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் ஒத்துழைப்போடு, இந்த அணைப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அணை நீர் பிரச்சினை

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் உரிமைகளையும் ஒருசேர கேள்விக்குறியாக்கும், காவிரி, மேகதாது, முல்லை பெரியாறு உள்ளிட்ட அணை நீர் பிரச்சினைகளை வைத்து இதற்கு முந்தைய அரசு அரசியல் மட்டும் தான் செய்ததே தவிர, தீர்வு காணவில்லை. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினைகளுக்காக கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எவ்வித பலனுமில்லை.

இதற்கிடையில், மேகதாது அணையை கட்டுவதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மறைமுக அனுமதி வழங்கியிருப்பதைப் போல, ஜோசப் விஜய்யின் கூட்டணிக் கட்சி தலைவரான வைகோ போன்றவர்கள் பொய் பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுவெளியில் பரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அறநெறியிலான அரசியலுக்கு நேர் எதிரானது.

தீர்வு காண வேண்டும்

எனவே, தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கும், தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை போல் இல்லாமல், தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கேரளா மாநில முதல்-மந்திரியின் ஒத்துழைப்போடு, இந்த அணைப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும்! விவசாயப் பெருமக்களின் துயர் துடைக்க வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.