தமிழக செய்திகள்

தங்கள் கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் - தமிழிசை

தவறு செய்பவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தங்களது கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தவறான கண்ணோட்டம்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா அவர்களுக்கு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அவர்கள் விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மீது பார்வை என்பது தவறான கண்ணோட்டத்தோடு சிலரால் அணுகப்படுகிறது என்று நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது.

தண்டிக்கப்பட வேண்டும்

இத்தகைய கண்ணோட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதில் உண்மை இருந்தால் உடனே யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். கட்சி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் இத்தகைய தங்களது கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். மீறினால் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT