திருச்சி,
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பதை முதல்-அமைச்சர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்த தி.மு.க. அரசு இப்போது இல்லை. தற்போது அமைச்சர் நிர்மல்குமார் போன்றோர் தீபம் ஏற்றுவதற்கு எதிராகப் பேசுவது கண்டனத்திற்குரியது. உயர்நீதிமன்றம் தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என உத்தரவிட்ட பின்பும், அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்த போதும், அந்த விவகாரத்தில் நல்ல சாதகமான தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம். கடந்த கால ஆட்சியைப்போல் இல்லாமல், மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என முதல்-அமைச்சர் விஜய் கூறிய கருத்தை வரவேற்கிறேன். ஆனால், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பதை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிச்சயமாக காங்கிரஸ் முதுகில் குத்தும்.
நாங்கள் எந்தக் கட்சியுடனும் மறைமுக கூட்டணியில் இல்லை. த.வெ.க.வை எதிர்ப்பது போலவே தி.மு.க.வையும் எதிர்க்கிறோம். தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி நிச்சயமாக இல்லை. த.வெ.க.வின் 6 மாத ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. பாடமே எழுதாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் கொடுக்க முடியும்? டாஸ்மாக் மதுபாட்டில்களை தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் நிர்வகிக்கப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகனுக்கு இணையாக முதல்-அமைச்சர் விஜய்யை வைத்து 'அரோகரா' போட்டதை முருக பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காவிரி விவகாரத்தில் தமிழ் நாட்டிற்குத்தான் அதிக உரிமை உள்ளது என்பதை கர்நாடக முதல்-மந்திரியும், தமிழக முதல்-அமைச்சரும் புரிந்து கொள்ள வேண்டும். நதிநீர் பங்கீட்டில் பா.ஜனதா பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை. பிரதமர் எந்த வகையிலும் தமிழ்நாட்டிற்கு தீங்கு விளைவிக்க மாட்டார். சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா படுதோல்வி அடைந்துள்ளது. அதில் தமிழக முதல்-அமைச்சருக்கு மேடை கூட ஒதுக்கப்படவில்லை. அந்த விழாவை அவர் புறக்கணித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.