நெல்லை,
நெல்லையில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டம்- ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வருகிற மழைக்காலத்துக்கு முன்பாக சாலைகளை சரி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போதைப்பொருட்களை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டோம்.
தமிழக நிதி நிலை குறித்து விரைவில் முதல்-அமைச்சர் விஜய் வெள்ளை அறிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். தமிழகமே அதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து உள்ளது. வரப்போகிற நாட்களில் அனைவரின் கேள்விகளுக்கும் முதல்-அமைச்சர் வாயிலாக பதில் கிடைக்கும்.
தவெக ஆட்சி பொறுப்பேற்று 40 நாட்கள் தான் ஆகி உள்ளது. முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதி படி அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். பட்ஜெட் தாக்கல் கூட்டம் தொடர்பாக சபாநாயகர் அறிவிப்பார். நெல்லை மாவட்டத்தில் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி நதியை பாதுகாப்பது தொடர்பாகவும், அணைகள், கால்வாய் கள் பராமரிப்பு போன்றவைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மழைக்காலத்திற்கு முன்னதாக நீர்நிலைகளில் உள்ள பணிகளை முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2 மாதங்களாக நிதி வரவில்லை என்று கேட்கிறீர்கள், அதுபோன்று எந்த நிதி பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.