சென்னை,
புனித ஜார்ஜ் கோட்டையில், புதிய இடத்திற்கு முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மாறுகிறது
சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில்தான் முதல்-அமைச்சரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இட நெருக்கடி காரணமாக, முதல்-அமைச்சரின் அலுவலகம் இட மாற்றம் செய்யப்படவுள்ளது.
தற்போது, தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில் இயங்கி வரும் முதல்-அமைச்சர் அலுவலக அறையை, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகவும், பொது மக்களின் வருகை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டும் முதல்-அமைச்சரின் அலுவலக அறையை இட மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, 10 அடுக்குமாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் விஜய்யின் அலுவலக அறை, அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் 10-ஆவது மாடியில் அமைய விருக்கிறது. இந்தத் தளத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் பெரிய மாநாடு கூடம் மற்றும் உணவகப் பகுதியை முதல்-அமைச்சரின் அலுவலகமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
முதல்-அமைச்சரின் அலுவலக அறை மாற்றப்படும் இந்தத் தளத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, வணிக வரித் துறையின் சில பிரிவுகளும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் முதல்-அமைச்சரின் அலுவலக அறை இட மாற்றம் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது.
தமிழக முதல்-அமைச்சர்களிலேயே பாரம்பரிய அலுவலகக் கட்டடத்திலிருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.