சென்னை,
தமிழ்நாடு சட்டசபை நிறைவு நாளான இன்று, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கவர்னர் உரைக்கு பதிலுரை வழங்கி பேசினார். அப்போது முதல்-அமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து பல விமர்சனங்களை வைத்தார். டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று அடித்த கொள்ளை ஒவ்வொன்றாக கஜானாவிற்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
இதனைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய் பேச்சுக்கு தி.மு.க உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். விஜய் பேசி முடித்ததும் உங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார். பின்னர் முதல்-அமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதல்-அமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதல்-அமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதல்-அமைச்சர் விஜய்யாக நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.