தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளை தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப்போகும் நாள். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமர் அவர்களும் உள்துறை மந்திரி அவர்களும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஆனால், சொல் ஒன்று - செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது என திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்த சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்த கருப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்த சட்டமுன்வடிவு இருக்கிறது. அவசரகதியில் இதனை நிறைவேற்ற கூடாது. மத்திய அரசு இதனை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

நேரு அவர்கள் இந்தியை திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியை காப்பாற்றினார். ஆனால், தற்போதைய மத்திய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் என சொல்லிக்கொண்டே அதனை சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் அரசியலமைப்பு சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததை போன்ற சட்டப் பாதுகாப்பு. #WithdrawDelimitationBill

தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.