சென்னை,
சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகம், சாலைகள், பூங்கா, விளையாட்டு மைதானம், மயானபூமி மற்றும் பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று (29.05.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ராயபுரம் மண்டலம், வார்டு-52க்குட்பட்ட அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தினை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, அங்குள்ள சமையல் கூடத்தினைப் பார்வையிட்டு சமைக்கும் இடத்தினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், பொதுமக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவினை வழங்கிடவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஆணையாளர், வார்டு-49 மற்றும் 51-க்குட்பட்ட எம்.சி. சாலை தனித்துவ அடையாளமாக விளங்கிடும் வகையில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ், ரூ.23.04 கோடி மதிப்பீட்டில் கிரானைட் கூழாங்கற்கள் (Granite Cobbles) மூலமாக சாலைகள், பாதசாரி நடைபாதை, கலைநயமிக்க விளக்குகள், அடையாள பலகைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், வார்டு-51க்குட்பட்ட ராபின்சன் விளையாட்டு மைதானத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் மற்றும் விளையாட்டுத் திடலில் கட்டமைப்பு தொடர்பாக அங்கு விளையாடிய சிறுவர்களிடம் கலந்துரையாடினார். மேலும், விளையாட்டு மைதானத்தில் உள்ள இலவச பொதுக் கழிப்பிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவறைகளை தூய்மையாக பராமரித்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் வார்டு-52க்குட்பட்ட அண்ணா பூங்காவினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களிடம் பூங்கா பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலந்துரையாடினார். பின்னர், பூங்காவினை தூய்மையாகப் பராமரிப்பது தொடர்பாக பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், வார்டு-53க்குட்பட்ட மூலக்கொத்தளம் மயான பூமியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக ஆணையாளர் ஆய்வு செய்து, மயான பூமியினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்திடும் வகையில் மரக்கன்று நடுதல், அழகிய புல்தரைகள் ஏற்படுத்துதல் போன்ற மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.