தமிழக செய்திகள்

தென்காசியில் டெங்கு தடுப்பூசி, கொசு விரட்டிகள் குறித்து நாட்டிலேயே முதல் ஆய்வு தொடக்கம்

இந்த தடுப்பூசி, டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசியில் டெங்கு தடுப்பூசி, கொசு விரட்டிகள் குறித்து நாட்டிலேயே முதல் ஆய்வு தொடங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று (17.10.2026) தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் டெங்கு காய்ச்சலை தவிர்க்கும் பொருட்டு, டெங்கு தடுப்பூசி மற்றும் பல்வேறு வகையான கொசு விரட்டிகளை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் தலைமை தாங்கினார். கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் ச. அனிஷ் சேகர், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் (ICMR) பிரதிநிதிகளிடம் கள ஆராய்ச்சிக்கான முன் ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்.

டெங்கு தடுப்பூசி மற்றும் கொசு விரட்டிகள் தொடர்பாக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்ததாவது, டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக ஒரு மருந்து இன்றுவரை இல்லை. ஆகவே, டெங்குவுக்கு எதிரான போரில் தடுப்புதான் நமது முதல் ஆயுதம். தடுப்புதான் நமது கடைசி ஆயுதமும் கூட. கொசுவை ஒழிப்பது, கொசுக்கடியிலிருந்து தப்பிப்பது, காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, இந்த மூன்று ஆயுதங்களைக் கொண்டே பல ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். நாட்டிலேயே முதன்முதலில் பொது சுகாதாரச் சட்டத்தை இயற்றிய மாநிலம் தமிழ்நாடு. பொது சுகாதாரத்தில் புதிய பாதைகளை முதலில் போட்டுக் காட்டுவது தமிழ்நாட்டின் வழக்கம். முதலமைச்சரின் வழிகாட்டுதலில், அந்த வழக்கத்தை இன்று கடையநல்லூரிலிருந்து தொடர்கிறோம்.

டெங்கு தடுப்பூசி - நாட்டிலேயே முதல் முன்னோடி ஆய்வு

பல ஆண்டுகளாக மூன்றே ஆயுதங்களுடன் போராடிய நமக்கு, அறிவியல் இன்று நான்காவது ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கிறது. அதுதான் டெங்கு தடுப்பூசி. ஜப்பான் நாட்டின் தகேடா (Takeda) நிறுவனம் உருவாக்கிய 'கியூடெங்கா' (Qdenga) என்ற இந்த தடுப்பூசி, டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போதும். முன்பு டெங்கு வந்ததா என்று ரத்தப் பரிசோதனை செய்த பிறகுதான் போட வேண்டும் என்ற தேவையும் இல்லை.

ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தடுப்பூசி அனுமதி பெற்றுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதற்கு முன்தகுதிச் சான்று (Prequalification) வழங்கி, டெங்கு அதிகம் பரவும் பகுதிகளில் 6 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பரிந்துரைத்துள்ளது. பிரேசில் நாடு, உலகிலேயே முதன்முறையாக இதைத் தனது தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துள்ளது. உலகெங்கும் இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரிய சர்வதேச மருத்துவ ஆய்வுகளில், இரண்டு தவணைகளும் பெற்றவர்களுக்கு டெங்கு காய்ச்சலிலிருந்து சுமார் 80 சதவீதமும், மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அளவுக்குக் கடுமையான பாதிப்பிலிருந்து சுமார் 90 சதவீதமும் பாதுகாப்பு கிடைத்தது. இந்தியாவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளிலும் இதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த ஆண்டு ஜுலை மாதம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. இந்தியாவில் அனுமதி பெற்ற முதல் டெங்கு தடுப்பூசி இதுவே.

செயல்திறன் குறித்து ஆய்வு

இந்தியச் சூழலில் நான்கு வகை டெங்கு வைரஸ்களும் ஒரே நேரத்தில் பரவுகின்றன. நமது ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக இதை எப்படி வழங்குவது? மூன்று மாதங்கள் கழித்து இரண்டாவது தவணைக்கு மக்களை எப்படித் திரும்ப அழைத்து வருவது? மக்கள் இதை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்? நமது மக்களிடையே இதன் பாதுகாப்பும் பயனும் எவ்வாறு உள்ளன? இந்தக் கேள்விகளுக்கு இந்திய மண்ணிலிருந்தே பதில் தேவை. அதனால்தான், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பே நிபந்தனை விதித்துள்ளது.

முதல் முன்னோடி ஆய்வு

அந்தப் பதிலைத் தேட யாரோ முன்வருவார்கள் என்று காத்திருக்காமல், தமிழ்நாடு முதலில் முன்வருகிறது. நாட்டின் தலைசிறந்த தொற்றுநோயியல் ஆராய்ச்சி நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (ICMR–NIE) நமது மாநிலத்திலேயே, சென்னையில் இருப்பது நமக்குக் கிடைத்த வரம். அந்த நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது குறித்த நாட்டின் முதல் முன்னோடி ஆய்வை இங்கே கடையநல்லூரில் மேற்கொள்ளவுள்ளது. கோவிட் காலத்தில் கோடிக்கணக்கான தடுப்பூசிகளைத் திறம்பட வழங்கிய அனுபவம் நமது துறைக்கு உண்டு. அந்த அனுபவத்தின் பலம், இந்த ஆய்வுக்குப் பின்னால் நிற்கிறது. இந்த ஆய்வில் என்ன நடக்கும் என்பதைக் கடையநல்லூர் மக்களுக்கு நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.

முதலாவதாக - இது புதிய மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பரிசோதனை அல்ல. உலகெங்கும் லட்சக்கணக்கானோர் ஏற்கெனவே பெற்றுள்ள, இந்திய அரசின் அனுமதி பெற்ற தடுப்பூசியே இங்கு வழங்கப்படும். நமது மக்களுக்கு இது எந்த அளவுக்குப் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது, இதை எப்படிச் சிறப்பாகக் கொண்டு சேர்ப்பது - இதுவே ஆய்வு. இரண்டாவதாக - இது முழுக்க முழுக்கத் தன்னார்வ அடிப்படையிலானது. தகுதியான ஒவ்வொருவருக்கும் முழு விளக்கம் அளிக்கப்பட்டு, அவர்களின் எழுத்துப்பூர்வ சம்மதத்துடன் மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும். யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.

மூன்றாவதாக - ஒப்புதல் பெற்ற ஆய்வு நெறிமுறை, நெறிமுறைக் குழுவின் அனுமதி, தேசிய வழிகாட்டுதல்கள் - இவற்றுக்கு உட்பட்டே ஒவ்வொரு படியும் நடக்கும். நான்காவதாக - தடுப்பூசி பெறும் ஒவ்வொருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். ஐந்தாவதாக - ஆய்வின் முடிவுகள், தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களுக்குச் சமர்ப்பிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்த முடிவு, அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படும்.

இறுதிக்கட்ட ஆய்வு

கடையநல்லூர் மக்கள் இன்று உருவாக்கப் போகும் சான்றுகள், நாளை தமிழ்நாட்டின் ஏழரை கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கும், இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் வழிகாட்டும். நமது சொந்த விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் இந்திய டெங்கு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளன. அவை வரும்போது, அவற்றை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்ற பாடத்தையும் இந்த ஆய்வு நமக்குக் கற்றுத் தரும். ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்கிறேன்: தடுப்பூசி ஒரு கேடயம். ஆனால், வீட்டில் தண்ணீரைத் தேங்க விட்டுவிட்டு, அந்தக் கேடயத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்க முடியாது. தடுப்பூசியும் வேண்டும்; கொசு ஒழிப்பும் வேண்டும். இரண்டும் சேர்ந்தால்தான் டெங்கு பின்வாங்கும்.

கொசு விரட்டிகள் குறித்த செயலாக்க ஆராய்ச்சி

டெங்குவை எதிர்த்து நாம் ஏற்கெனவே செய்து வரும் பணிகள் - வீடுகளிலும் பொது இடங்களிலும் தேங்கும் நீரை அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு, தேவையான இடங்களில் புகைமருந்து தெளித்தல், காய்ச்சல் கண்காணிப்பு, உரிய நேரத்தில் சிகிச்சை - இவை தொடரும். ஆனால், இவற்றுடன் கூடுதலாக எதைச் சேர்த்தால் டெங்கு பாதிப்பு இன்னும் குறையும் என்பதை ஊகத்தின் அடிப்படையில் அல்ல, அறிவியலின் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும். தோலில் பூசும் கொசு விரட்டும் கிரீம்கள், மின்சாரத் திரவக் கொசு விரட்டிகள் - இவை கொசுக்கடியிலிருந்து கூடுதல் தனிநபர் பாதுகாப்பை அளிக்கக்கூடும். ஆனால், இவற்றை வழக்கமான தடுப்பு நடவடிக்கைகளுடன் இணைத்துப் பயன்படுத்தும்போது, ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட டெங்கு தொற்று உண்மையிலேயே குறைகிறதா? இவை எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகள் உண்டா? மக்கள் இவற்றை ஏற்றுத் தொடர்ந்து பயன்படுத்துவார்களா? இந்தக் கேள்விகளுக்கு நடைமுறைச் சூழலில் பதில் காண வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் செப். 8 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், கடையநல்லூர் நகராட்சியின் 33 நகர்ப்புற வார்டுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கும் ICMR–NIE, சென்னை நிறுவனமும், தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையும் இணைந்து செயல்படுகின்றன. இந்த ஆய்வில் கொசு விரட்டிகள் பயனுள்ளவை என்று நிரூபணமானால், அவற்றைத் தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும். ஆனால், இந்தத் துறையின் அமைச்சர் என்ற முறையில் நான் இங்கே உறுதியாகச் சொல்கிறேன்: ஆராய்ச்சியின் முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படவில்லை. அறிவியல் என்ன சொல்கிறதோ, அதுவே அரசின் முடிவாக இருக்கும்.

ஒரு மருத்துவராக, ஒரு அமைச்சராக நான் நம்புவது இதுதான். நமக்குத் தெரியாததை ஆராய்ச்சியால் அறிவது. அறிந்ததை மக்களிடம் தயக்கமின்றிக் கொண்டு சேர்ப்பது. அதற்கான மனித வளத்தைத் தொடர்ந்து பலப்படுத்துவது. இதுவே பொது சுகாதாரத்தின் வழி. இன்று நாம் இந்த மூன்றையும் ஒரே மேடையில் செய்கிறோம். இந்த ஆய்வுகளில் பங்கேற்கும் ICMR–NIE விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இன்று கடையநல்லூரில் தொடங்கும் இந்த முயற்சிகள், தென்காசி மாவட்டத்தின் சுகாதார மேம்பாட்டிற்கும், தமிழ்நாட்டில் டெங்கு நோயின் சுமையைக் குறைப்பதற்கும், நாட்டிற்கே வழிகாட்டுவதற்கும் உதவட்டும். அறிவியல் ஆராய்ச்சி, மக்கள் பங்கேற்பு, வலுவான மருத்துவக் கட்டமைப்பு இம்மூன்றின் மூலம் டெங்கு பாதிப்பைக் குறைத்து, ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் அ. சோமசுந்தரம், இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் ஏ. ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT