தமிழக செய்திகள்

'காதல்கோட்டை' சினிமா கிளைமாக்ஸ் காட்சி போல ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி

ரெயில் நிலையத்திற்குள் அனுமதியின்றி போட்டோ, வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

அஜித் குமார் மற்றும் தேவயானி நடிப்பில், இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான காதல் கோட்டை திரைப்படம் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் படங்களில் ஒன்றாகும். தேவா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.

கிளைமாக்ஸ் காட்சி

இந்தநிலையில், காதல்கோட்டை சினிமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் அஜித்குமார். நடிகை தேவயாணி ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் காட்சி பிரபலமானது. அந்த படத்தில் வரும் பாடல் வரிகளுக்கு ஏற்ப, கண்ணும் கண்ணும் மோதுமம்மா…நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்…என்ற பாடல் ஒலிக்கும். இதுபோன்று மதுரை ரெயில் நிலையத்தில் ஒரு இளம் பெண்ணும், வாலிபரும் ஜோடியாக ரீல்ஸ் எடுத்தது தொடர்பாக மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஏ.ஐ. மூலமாக உருவாக்கப்பட்ட வீடியோவா என ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், ரெயில் நிலையத்தில் வைத்து பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயிலில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, ரீல்ஸ் வெளியிட்டவர்களின் ஐ.டி.யை வைத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

போட்டோ, வீடியோ எடுப்பது தடை

ரெயில் நிலையத்திற்குள் அனுமதியின்றி போட்டோ, வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரெயில் வரும்போது, தண்டவாளத்தில் நின்றும், ரெயில் மீது ஏறியும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன், சிறை தண்டனைக்கு உரிய குற்றம் எனவும் ரெயில்வே விதிகளில் கூறப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.