சென்னை,
நாட்டின் மிக நீண்ட கால பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ள பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சித்தலைவர்கள், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
4,399 நாட்கள் நரேந்திர மோடி பாரதப் பிரதமராகத் தொடர்ந்து இருப்பது பாராட்ட வேண்டிய சாதனை. ஆனால் அது ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது பிழை. 1947 முதல் 1952 வரை நேரு அவர்கள் பிரதமராக இருந்தார் என்பதை மறக்க முடியுமா? நீக்க முடியுமா?.
பாஜகவின் கணக்கு அவர்களுக்கு ஏற்பு என்பதைப் பற்றிக் கருத்துச் சொல்லவேண்டியதில்லை; ஆனால் ஊடகங்கள் பாஜகவின் கூற்றை விளக்கமில்லாமல் வெளியிடுவதுதான் வியப்பளிக்கிறது. பிரதமர் மோடியின் 12-ஆண்டுச் சாதனையைப் பாராட்டுவோம். அதே நேரத்தில் பாரத ரத்னா நேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்
1947 முதல் 1952 வரை பிஞ்சுக் குழந்தைப் பருவத்தில் இருந்த ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவஹர்லால் நேருவைச் சார்ந்தது என்பதை நினைவு கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.