தமிழக செய்திகள்

காதலித்து கழற்றி விட நினைத்த மாணவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கொடூர காதலன்

உன்னிடம் கார் உள்ளதா, பைக் உள்ளதா? என்றெல்லாம் கேட்டு மாணவி, காதலனை வெறுப்பேற்றியதாகவும் தெரிகிறது.

திருச்சி,

திருச்சி ஐ.ஜி. பங்களா முன்பு நேற்று இரவு ஒரு காதல் ஜோடி வெகு நேரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கினார். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த அந்தப் பெண் அங்கு மயங்கி விழுந்தார்.

அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத அந்த வாலிபர் அங்கு கடந்த கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தார். அவர்களின் சண்டையை நேரில் பார்த்துகொண்டிருந்த அக்கம்பக்கத்தினர், கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் அங்கு ஓடோடி வந்தனர். மேலும் ஐ.ஜி. பங்களாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அங்கு வந்தனர். கல்லால் தாக்கியதில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண்ணை மீட்ட போலீசார் உடனே ஆம்பு லன்சை வரவழைத்து அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை தாக்கிய கொடூரமாக காதலனை கே.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். பலத்த காயமடைந்த மாணவி மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணையில் கைதானவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த வியாகுல நவீன் (வயது 22) என்பது தெரிய வந்தது. இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து வந்ததும் தெரிய வந்தது. தற்போது தில்லை நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை பார்த்ததும் தெரியவந்தது.

அவருக்கும் திருச்சியில் மற்றொரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்த ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இளங்கலை பட்டப்படிப்பை முடித்த அவர் தற்போது திருச்சியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக இரண்டு பேரும் காதலித்து வந்துள்ளனர். தற்போது அந்த பெண்ணின் பெற்றோர் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் நேற்று அவர்கள் இரண்டுபேரும் சந்தித்து பேசிகொண்டிருந்தனர.அப்போது

அந்த மாணவி தனது தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக காதலன் நவீனிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் உன்னிடம் கார் உள்ளதா, பைக் உள்ளதா? என்றெல்லாம் கேட்டு அவர் வெறுப்பேற்றியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நவீன், காதலியின் கழுத்தை இறுக்கி கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இரவும், பகலும் பரபரப்பாக காணப்படும் ஐ.ஜி. ஏ பங்களா முன்பு கல்லூரி மாணவியை கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த காதலன் மாணவியை கொடூரமாக தாக்கும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.