தமிழக செய்திகள்

தேனிசைத் தென்றல் தேவா மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தேவா, ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.

சென்னை,

பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா இன்று காலமானார். அவருக்கு வயது 76. இன்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், சிறந்த பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பேரன்பைப் பெற்றவரும், 1992-ல் அம்மாவின் திருக்கரங்களால் கலைமாமணி விருதைப் பெற்றவரும், அம்மாவால் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டவருமான தேனிசை தென்றல் தேவா, கழகத்திற்காக பல்வேறு கொள்கை விளக்கப் பாடல்களை சிறந்த இசையமைப்புடன் வடிவமைத்துக் கொடுத்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். மேலும், இளைஞர்களைக் கவரும் வகையிலான கானா பாடல்களை எழுதி பாடியுள்ளார்.

எப்பொழுதும் சுறுசுறுப்போடும், புன்னகையோடும் இருக்கும் போற்றுதலுக்குரிய அன்புச் சகோதரர் தேனிசைத் தென்றல் தேவாவை இழந்து வாடும் அவரது மகனும், இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவாவுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், இசைப் பிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், தேனிசைத் தென்றல் தேவாவுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT