சென்னை,
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஈரோடு அரசு மருத்துவனையின் பார்க்கிங் பகுதியில் கேட்பாரற்று போட்டுக் கிடக்கும் நூற்றுக்கும் மேலான புதிய படுக்கைக் கட்டில்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை நோயாளிகள் உபயோகப்படுத்தக்கூடிய நிலையில் புதிதாக இருப்பவை. அனைத்தும் தூசி படிந்தும், துருப் பிடிக்கும் நிலையிலும் அம்போ என கிடப்பது அவலத்தின் உச்சம்.
அரசு மருத்துவனைகளின் வார்டுகள் மற்றும் வராந்தா தரைகளில் படுத்துக் கிடக்கும் அப்பாவி நோயாளிகள் தமிழகம் முழுவதுமே நிரம்பி வழிகையில், இப்படி யாருக்குமே பலனில்லாமல் படுக்கைக் கட்டில்களை அநாதரவாக போட்டு வைத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யே!...கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் கள ஆய்வு செய்ததாக ஊர்வலம் வரும் உங்களது வெத்துவேட்டு அமைச்சர்கள் கண்களில் இன்னமும் இது படாமல் இருப்பது உங்களது அரசின் நிர்வாகத் தோல்வியினையே பறைசாற்றுகிறது. அதிகாரிகளுக்கு உங்களது தத்தக்கா பித்தக்கா ஆட்சியில் துளியும் பயமில்லை என்பதன் அலட்சிய அடையாளமே இது.
இன்று கூட ஒரு மருத்துவமனையின் திடீர் ஆய்வுக்கு வந்த உங்களது அமைச்சர் ஒருவரிடம் ’நீங்கள் வருவது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். தகவல் வந்துதான் நாங்களும் வந்தோம்’ என்று சொல்லி மந்திரியின் மூக்கை உடைத்தார்கள் நிருபர்கள். இப்படித்தான் எல்லா திடீர் விசிட்டுகளும் முன்கூட்டி அதிகாரிகளிடம் சொல்லி வைத்து செட்-அப்பாக நடைபெறுகின்றனவா? இந்த வெட்கக்கேட்டிற்கு நாடக மாடல் தவெக உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.