சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக்கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கட்சி நிதி வாங்கிய விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மீது முதல்-அமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றம் சாட்டி ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ள வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகும் வகையில் மாறிவிட்டது” என்று கூறினார். தொடர்ந்து 2 தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளிக்காமல் காரில் புறப்பட்டு சென்றார்.