தமிழக செய்திகள்

ஆதிச்சநல்லூரில் சுற்றுச்சுவர் அமைக்க தோண்டிய பள்ளம் மூடப்பட்டது

ஆதிச்சநல்லூரில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டிய பள்ளம் மூடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்குகிறது. இங்குள்ள பரும்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி, ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் தொல்லியல் துறையினர் நில அளவீடு செய்து, ரேடார் கருவி மூலம் தரையின் அடியில் உள்ள பொருட்களை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக, கடந்த 6-ந்தேதி இரவில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது தரையின் அடியில் இருந்த முதுமக்கள் தாழிகள் சேதம் அடைந்து, மண்பாண்ட குவியலாக கிடந்தது. இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள், அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் மத்திய தொல்லியல் துறை அதிகாரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், அங்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து தொழிலாளர்கள் மண்வெட்டி மூலம் மண்ணை இழுத்து பள்ளத்தை மூடினர்.

ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் தரையின் அடியில் உள்ள பழங்கால பொருட்கள் சேதம் அடையாத வகையில், மாற்று முறையில் ஆழம் குறைவாக பள்ளம் தோண்டி, சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.