சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது. இந்த ஆட்சி ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும், மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் உறுதியாகத் தொடரும். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், அவர்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது.
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் தலைவிரித்தாடிய கமிஷன் கலாச்சாரத்திற்கும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் எந்தவொரு அனுமதி வாங்குவதற்கும் 10 லட்சம், 15 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என கப்பம் கட்ட வேண்டிய அவல நிலை இருந்தது. ஆனால் இன்று, 10 காசு கூட லஞ்சம் இல்லாமல் மக்கள் நேர்மையாக அனுமதிகளைப் பெறுகிறார்கள். ஊழலை வேரோடு பிடுங்கி எறியும் நேர்மையான அரசாக விஜய் அரசு திகழ்வதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே மிகச் சிறப்பான மற்றும் வலுவான தோழமை உணர்வு மலர்ந்துள்ளது. த.வெ.க எங்களை மிகவும் மதிக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 'திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என்று அறிவித்தபோது, தொண்டர்கள் மண்டபமே இடிந்து விழும் அளவிற்கு கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்கள். த.வெ.க-வோடு கைகோர்ப்பதுதான் ம.தி.மு.க தொண்டர்களின் உண்மையான உணர்வும், முழுமையான மனநிலையாகும்.
ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் விஜய் தலைமையிலான அரசுக்கு ம.தி.மு.க தொடர்ந்து தனது அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.