சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013 அமலில் உள்ள நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்டம்-2026 வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ஐயே திருத்தம் செய்யவேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் (அரிசி அல்லது கோதுமை) இலவசமாக வழங்கப்படுகிறது.
முன்னுரிமை குடும்பங்கள் (PHH) என்றழைக்கப்படும் பிற குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒருவருக்கு மாதம் 5 கிலோ வீதம் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்டம்-2026 வரைவு அறிக்கையை பொதுமக்களின் கருத்து கேட்புக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின்படி, AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒருவருக்கு 7 கிலோ வீதம் உணவு தானியம் வழங்கப்படும். ஆனால் அதிகபட்சம் 35 கிலோ மட்டுமே வழங்கப்படும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, 2 அல்லது 3 பேர் கொண்ட குடும்பத்துக்கும், 6 அல்லது 7 பேர் கொண்ட குடும்பத்துக்கும் அதிகபட்சம் 35 கிலோவே வழங்கப்படும். இதனால், சிறிய குடும்பங்களுக்கு (எ.கா. 2 பேர்) மாதம் 14 கிலோ மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படும்.
மத்திய அரசு இந்த வரைவு அறிக்கையை பொது தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த பொதுமக்களின் கருத்துக்களை ஜூலை 13-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ஒரு நபரின் ஒரு மாத சராசரி உணவுத் தேவை சுமார் 8.5 கிலோ முதல் 9.5 கிலோ வரை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி தனிநபருக்கு வழங்கப்படும் உணவு தானிய அளவு குறையும் நிலை ஏற்படும். இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில், ஏழை எளிய மக்களுக்கு தற்போது வழங்கப்படும் அளவே குறைவானதாக இருக்கும்போது, தனிநபருக்கு 7 கிலோ என்றும் குடும்பத்துக்கு அதிகபட்சம் 35 கிலோ என்றும் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ஐயே திருத்தம் செய்து, தனிநபருக்கு வழங்கப்படும் 5 கிலோவை 7 கிலோவாக அதிகரிப்பதே சரியானதாக இருக்கும். எனவே, மத்திய அரசு மக்கள் கருத்து கேட்புக்காக வெளியிட்டுள்ள இந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ஐயே திருத்தம் செய்ய வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.