சென்னை
தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடைய தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.வில் இணைந்திருந்தனர். இதனால் காலியான அந்த இரு தொகுதிகளுக்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவு நடந்து, நேற்று வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது.
இதில், 2 தொகுதிகளிலும் ஆளும் த.வெ.க. சார்பில் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்ட மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியில், 74 ஆயிரத்து 48 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 54 ஆயிரத்து 8 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் 47 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்று 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதேபோன்று, த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா தாராபுரம் தொகுதியில், 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளை பெற்று 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பறக்கும் படைகள் வாபஸ் பெறப்பட்டன.
இதனால், புதிய அரசு திட்டங்களை செயல்படுத்த இனி தடையில்லை. இதனை தொடர்ந்து திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு திட்டங்கள் மீண்டும் அமலாகின்றன. இரு மாவட்டங்களிலும் `தாய்மாமன் தங்க மோதிரம்', `வெற்றிப்பயண திட்டம்' ஆகியவை அமலுக்கு வருகின்றன.