சென்னை,
மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
2026-27 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள மக்கள் நலனுக்கான அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு தனியார் கூட்டு வினை என்ற அடிப்படையில் நவீன தாராளமய பாதையை ஒட்டியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதையும், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்பதையும் அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.
புதிய கட்டண உயர்வுகள் ஏதும் முன்மொழியப்படவில்லை. அதே நேரத்தில் வருவாய் கசிவை தடுப்போமென்று உறுதிபடக் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அரசியல் உறுதியோடு இது நிறைவேற்றப்பட வேண்டும்.
பள்ளிகளின், மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, 500 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், போதை ஒழிப்பு, சுகாதாரத்துறையில் கருவுற்ற மகளிர் பராமரிப்பு மையங்கள், 5 மண்டலங்களில் புற்று நோய் சிகிச்சை மையங்கள், மூத்த குடிமக்களுக்கான நடமாடும் மருத்துவகங்கள் - பாதுகாப்பு இல்லங்கள், அறிதல் திறன் குறைபாடு உடையோருக்கு நம்பிக்கை இல்லங்கள், புதிய கால்நடை காப்பீடு, ஜென் இசட் மாணவர்களுக்கு நவீன மிதி வண்டிகள், திருநர்களுக்கு சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பு, பொது நூலகங்கள் டிஜிட்டல் மயம், கிராமிய விளையாட்டு ஊக்குவிப்பு, ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், நாட்டுப் புறக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
மக்கள் நல அறிவிப்புகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படவில்லை. முதியோர் உதவித் தொகையும் உயர்த்தப்படவில்லை. பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது என்பதும் ஏமாற்றம் அளிப்பதாகும்.
10,000 அரசுப் பள்ளிகளில் "சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க துவக்கம் ஆகும். இது நடைமுறைப்படுத்தும் போது நிரந்தர துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு பள்ளிக்கு ஒரு நாளைக்கு ரூ.380/- மட்டுமே கிடைக்கிறதென்பது ஒதுக்கீட்டின் போதாமையை வெளிப்படுத்துகிறது. பகுத்தறிவு, பாலின சமத்துவம், சுற்றுச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய முற்போக்கான பாடத் திட்டத்தை உருவாக்குவது என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. ஆனால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட் ஆவணம் காண்கிற கனவுக்கு ஈடு கொடுப்பதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
இளைஞர்களிடம் வேலை வாய்ப்பு குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உள்ள நேரத்தில் வேலை உருவாக்கம் குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் ஏதுமில்லை. வேலையில்லா கால நிவாரணம் அறிவிக்கப்படுமென்ற எதிர்பார்ப்பும் இடம்பெறவில்லை. 20000 இளைஞர்களுக்கு பணியிடப்பயிற்சி, உதவித் தொகை என்கிற திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. இது தனியார்கள் மலிவான உழைப்பை பெற்றுக் கொள்வதற்கே பயன்படும்.
அரசு - தனியார் கூட்டு வினை என்பது மாணவர் விடுதி மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, மின் பகிர்மான பாதை, போக்குவரத்தில் மொத்த செலவின ஒப்பந்தம் ஆகியவற்றில் முன்மொழியப்பட்டுள்ளது. இது நவீன தாராளமய பாதையை அடியொற்றிய நடவடிக்கையே ஆகும். தனியார்கள் லாபம் பெறவே இந்த கூட்டு வினைகள் உதவுமே தவிர சமூகப் பொறுப்புடனான செயலாக்கத்திற்கு பயன்படாது.
விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து வரம்பு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இதில் இடம் பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன்பெறத்தக்க வகையில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். விபி ஜிராம் ஜி திட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள, 125 நாட்களை நிறைவு செய்பவர்களுக்கு கூடுதல் 25 நாட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சராசரி வேலை நாட்கள் 44 முதல் 59 ஆகவே இருக்கிற சூழலில் சட்டப்படியான வேலை நாட்களை உறுதி செய்வதும், அதற்கு மேலாக 25 நாட்கள் வேலை தருவதுமே பெரும் பகுதி மக்களுக்கு பயனளிக்கும். இதற்கான நிதிப் பகிர்வுக்கு மத்திய அரசின் வஞ்சனையை எதிர்த்து குரல் கொடுத்து மாநில நிதி உரிமையை உறுதி செய்ய வேண்டும். காவிரி, கொள்ளிடம் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி நீரியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று கதவணைகளை உறுதி செய்ய வேண்டும். வைகை குண்டாறு இணைப்புத்திட்டம் தாமதம் பற்றி பட்ஜெட் குறிப்பிட்டு இருப்பது சரியானது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து காலவரையறை தீர்மானித்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
'திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அறிவிப்பு வரவேற்கத்தக்கது. டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை பற்றி பட்ஜெட் பேசி இருப்பது நடைமுறையில் அமலாக வேண்டும். கிரானைட், மணல் மற்றும் கனிம வளங்கள் அனைத்தும் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தனியார், ஒப்பந்த முறை தடுக்கப்பட வேண்டும். அரசின் வருவாய் உயர்வதற்கான வழியாகும் இது. சுற்றுலா ஊக்குவிப்பிற்கான அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை. மாமல்லபுரத்தை போல சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியும் சுற்றுலா மேம்பாட்டில் இணைக்கப்பட வேண்டும். நதி நீர் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சூழல் சுற்றுலா ஆகியன அரசின் வருவாய் பெருக்கத்திற்கு உதவும். மாநிலம் முழுமைக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா கொள்கை உருவாக்குவதும் முக்கியம். தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பற்றி பட்ஜெட் பேசியிருப்பது முக்கியமானது.
தொழிலாளர் உரிமைகள் பற்றி பட்ஜெட் எந்தக் குறிப்பையும் கொண்டதாக இல்லை. தொழிவாளர் தொகுப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கிய வடிவில் தமிழ்நாட்டில் அமலாக்க மாட்டோமென்றும், மாநில அரசின் அதிகார வரம்பைப் பயன்படுத்தி தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வோமென்றும் அறிவித்திட வேண்டும்.
பழைய பென்சன் திட்டம் பரிசீலிக்கப்படுமென்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடி சிறப்பு உட்கூறு திட்டங்களின் கோட்பாடுகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டு மடைமாற்றம் இல்லாத, இலக்கிடப்பட்டதாக, ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்ததக்கதாக அமலாக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர் அவல்கல்வி ஊக்குவிப்பு வரவேற்கத்தக்கது. ஜூன் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்ற காலவரம்பு நீக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, வட்டி மானியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் உயர்வு இல்லை என்பதும் ஏமாற்றம் தருகிறது. பணியில்லா கால மீன்பிடித் தொகை தற்போது ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. அதைவிட குறைவாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
சிறுபான்மையினர் நலனுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. புனித ஹஜ் மானியம், கிறித்தவ இஸ்லாமிய மகளிர் சங்கங்கள், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாராட்டத்தக்கது.
புதிய வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய கட்டுமான செலவுகளின் நிலைமையை ஒப்பிடும் போது அது போதுமானதல்ல. ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.
மொத்தத்தில் பட்ஜெட் மக்கள் நல அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் சார்ந்தும், அது வெளிப்படுத்தி இருக்கிற எண்ணங்கள் சார்ந்தும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் அவற்றின் அமலாக்கம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் உள்ள போதாமை களையப்பட வேண்டும். நவீன தாராளமய பொருளாதாரப் பாதையில் இருந்து விலகாமல் சாதாரண எளிய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. நிதி கூட்டாட்சி குறித்த வலுவான குரலை மத்திய அரசை நோக்கி எழுப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் சார்ந்து மக்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.