சென்னை,
தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா... விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் இருக்கிறார், ஆனால் மின்சாரம்தான் இல்லை.
மின்சாரம் இல்லாததை விட, அதற்குப் பிறகு வந்த விளக்கங்களில்தான் மின் துறையின் பல்பே பியூஸ் ஆகிறது. விழா ஜெனரேட்டரில்தான் நடந்தது; ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என அமைச்சர் சொல்கிறார். மின்வாரியத்தின் தரப்பிலோ மின்தடை என கூறப்பட்டுள்ளது.
வராத மின்சாரத்துக்கு விளக்கம் மட்டும் இரண்டு Phase-ல் வருகிறது. ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? மின்வாரியத்தின் விளக்கம் சரி என்றால் அமைச்சர் சொன்ன ஜெனரேட்டர் கதை என்ன?
இதற்கிடையில் மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மின்சாரம் போனதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. மின்வாரியத்தின் பதிவு எப்படிப் போனது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.