சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தசூழலில் இறுதி வாக்காளர் பட்டியல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றவுடன் அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருந்தார். அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படஉள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை (ஏப்.9) கடைசி நாளாகும்.
முன்னதாக தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதன்படி மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.93 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,728 பேரும் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே வாக்காளர் இறுதிபட்டியலை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடத்துவதற்கு முன்பாக தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணி முடிந்த பின்னர் நவம்பர் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 97 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருந்தனர்.
மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில் 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் 4.23 லட்சம் தகுதிபெறாதவர்கள் நீக்கப்பட்டனர். அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆக இருந்தது. அவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர்; பெண் வாக்காளர்கள் 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர்; மூன்றாம் பாலினத்தவர் 7,617 ஆகும்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் காலகட்டம் என்பதால், வேட்புமனு தாக்கலின் இறுதி நாளுக்கு 10 நாட்கள் முன்புவரை பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. அதன்படி சுமார் 6½ லட்சம் விண்ணப்பங்கள் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்டன.
இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கடந்த 6-ந்தேதி வாக்காளர் துணை பட்டியல் தயார் செய்யப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலுடன் துணை பட்டியலை இணைத்து புதிய வாக்காளர் பட்டியலை நேற்று தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
அதன்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இது, கடந்த இறுதி வேட்பாளர் பட்டியலைவிட 6 லட்சத்து 35 ஆயிரத்து 911 வாக்காளர்களை கூடுதலாக கொண்டதாக உள்ளது.
தற்போதைய புதிய பட்டியலில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் 6.4.2026 நிலவரப்படி தயார் செய்யப்பட்டதாகும். வழக்கம் போல இந்த புதிய வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 74 ஆயிரத்து 247 பேர் அதிகமாக உள்ளனர்.
இந்த பட்டியல்தான் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பட்டியல்தான், அரசியல் கட்சிகளுக்கும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும், வாக்குச்சாவடிகளில் அனுமதிக்கப்படும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் அளிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். ஆனால் தகுதியுள்ள வாக்காளர் என்றாலும், இந்த தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்காது.