தமிழக செய்திகள்

நாமக்கல்லில் பற்றவைத்த தீ நாடு முழுவதும் பரவியது - மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுகவின் திட்டங்கள் சாதனை திட்டங்களாகத்தான் இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தொகுதி மறுவரையறை பேராபத்தை நாட்டிலேயே முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது நாம் தான். மறுவரையறையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் அரசியல் தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். ஒரு கூட்டுக்குழு அமைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம். அப்போது சட்டமன்றத்தில் ஒன்று பேசியது அதிமுக; வெளியே போய் நாம் நாடகமாடுவதாக பேசியது.

மசோதா வந்ததும் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினோம். சட்ட மசோதாவை எரித்தோம். நாமக்கல்லில் பற்றவைத்த தீ நாடு முழுவதும் பரவியது. வெப்பம் நாடாளுமன்றம் வரை சென்றது. தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனையில், மத்திய அரசு சிறப்பாக செய்யும் என பழனிசாமி கூறினார். அதிமுக போன்ற நாணயமற்ற கட்சியை யாரும் பார்த்ததில்லை உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கிறது அதிமுக. அடிமைகளிடம் மறுபடியும் தமிழ்நாடு சிக்கலாமா? சிக்கினால் தமிழ்நாடு, தமிழ்நாடாக இருக்காது. அடிமை அதிமுக, மதவாத பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும்.

திராவிட மாடலால் திருப்பூர் அடைந்துள்ள மாற்றம், வளர்ச்சியை நீங்கள் கண்கூடாக பார்த்துள்ளீர்கள். நாம் வாக்கு கேட்டு போகும் இடங்களில் எல்லாம் மக்கள் நம் சாதனைகளை பட்டியலிட்டு சொல்கின்றனர். திமுகவின் திட்டங்கள் சாதனை திட்டங்களாகத்தான் இருக்கும். நம் திட்டங்களை பிறர் காப்பியடிக்கின்றனர்.

நம் சாதனைகளைச் சொல்லி எனக்கு அசதியாகிவிட்டது. அதற்கே தனி மாநாடு போட வேண்டும். சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லாத பழனிசாமி அசிங்கமாக பேசுகிறார். சாபம் விடுகிறார். அவருக்கு 11-வது தோல்வியை கொடுக்க வேண்டும். துரோகம் செய்யும் கூட்டத்திற்கு பாடம் புகட்ட வேண்டும். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று வருவது உரிமைத்தொகை, விடியல் பயணத்தை நிறுத்துவதற்காகத்தான். இட ஒதுக்கீடு உரிமையை பறித்து. சமூக நீதியை படுகொலை செய்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி.

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்த்ததாக பிரதமர் மோடி சொல்கிறார். 2023-ல் கொண்டு வந்த மசோதாவை நாம் ஆதரித்தோம். 2023 செப்டம்பரில் கொண்டு வந்த மசோதாவை 31 மாதங்களாக மூலையில் போட்டிருந்தீர்கள். மகளிர் முன்னேற்றத்தில் உங்களுக்கு அக்கறை இல்லை. உங்கள் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள். உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது திமுக.

தமிழ்நாட்டின் எழுச்சி, வெற்றியை நான் கொண்டாடுகிறேன். நீதி, கண்ணியம் கூட்டாட்சிக்காக நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.