தமிழக செய்திகள்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப்படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது

வேளாண் பட்டயப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

கோவை,

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப்படிப்பிற்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 3 இளம் அறிவியல் வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த கல்வியாண்டில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அரசு இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 2,516 ஆகவும் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடு 3,051 இடங்கள் என மொத்தம் 5.567 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இதுதவிர அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை பிரிவில் 340 இடங்களுக்கும் விண்ணப்பித்தனர்.

தரவரிசை பட்டியல்

மேற்கண்ட இடங்களுக்கு கடந்த மே மாதம் 6-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மொத்தம் 26,709 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியான 24,435 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டன. இவர்களில் 15,757 பேர் மாணவிகள் ஆவர். இந்த நிலையில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கடந்த 7-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

முதற்கட்ட கலந்தாய்வு

இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு தொடர்ந்து 15-ந்தேதி வரை நடக்கிறது. 15-ந் தேதி முடிவில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது என தெரியவரும். இதனை தொடர்ந்து 17-ந்தேதி விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு கலந்தாய்வும் நடக்கிறது. பின்னர் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மாணவர்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 20-ந்தேதியும். பொதுப்பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும் நடக்கிறது. இதுதவிர, வேளாண் பட்டயப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.