சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பே தன் பிரசாரக் கூட்டங்களில் பேசும்போது, 'ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான அரசை அமைப்பேன்' என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சி அமைத்த பிறகு தனது முதல் பணியாக ஊழலின் ஊற்றுக்கண்களை அடைக்கத் தொடங்கிவிட்டார். எந்தெந்த துறைகளில் ஊழலுக்கு வாய்ப்பு இருக்கிறதோ? அந்தந்த துறைகள் மீதெல்லாம் அவரது பார்வை பாய்ந்துவிட்டது. அமைச்சர்களை நியமிக்கும் போதே, சுத்தமான கரங்களுக்கு நீங்கள் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., "ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்" என்று பாடுவார். அதனை விஜய் இன்று செயலில் காட்டத் தொடங்கிவிட்டார்.
முதலில் ஊழலுக்கு இடம் இருக்கும் துறைகளிலெல்லாம் நேர்மையான மற்றும் கண்டிப்பான உயர் அதிகாரிகளை நியமித்தார். அவர்களும் முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்புக்கேற்ப தங்கள் பணிகளைத் தொடங்கி விட்டனர். முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், "நீங்களும் தவறு செய்யக்கூடாது. உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களும் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும்” என்று எச்சரித்து இருக்கிறார். லஞ்சத்துக்கு அதிகம் இடம் உள்ள துறைகளிலெல்லாம் இப்போது லஞ்சப் பரிமாற்றம் சுத்தமாக நின்றுவிட்டது. டாஸ்மாக் நிர்வாகத்தில் மாமூல் வழிகளெல்லாம் அடைக்கப்பட்டுவிட்டது. பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மணல் கொள்ளையும் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. கனிம வளக் கடத்தலைத் தடுக்கவும், முறையற்ற சுரண்டல்களைக் கட்டுப்படுத்தவும் செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பத்திரப்பதிவுத்துறையில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் சோதனை நடத்தி லட்சக்கணக்கான பணத்தை கைப்பற்றினர். பல சார்பதிவாளர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். நகராட்சித் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு முழுவதும் கட்டிட அனுமதிகளை வழங்கும் நகரமைப்பு அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளதோடு, மக்களிடம் எதற்கும் எந்தப் பணமும் வாங்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக நலத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மரியம் பல்லவி பல்தேவ், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள கொள்முதல் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் இருக்கவேண்டும் என்று எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், தவறு செய்த பல ஊழியர்களை 'சஸ்பெண்ட்'-ம் செய்துவிட்டார்.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இதுவரை அவர்கள் கொடுத்து வந்த 25 சதவீத கமிஷனை இனி யாருக்கும் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு பைசா கூட யாருக்கும் கமிஷனாக கொடுக்கவேண்டாம். ஆனால் பணிகளின் தரத்தில் மட்டும் சமரசமே கிடையாது. குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும். அனைத்து டெண்டர்களும் http://www.tntender.gov.in வெளியிடப்படும். இதில் எந்த ஒப்பந்ததாரருக்கும் தனிச் சலுகை கிடையாது. இதுபோல துறை அதிகாரிகளும் லஞ்சத்துக்கு கிஞ்சித்தும் இடம் அளிக்கக்கூடாது" என்று உரத்த குரலில் பேசியுள்ளார். இதுபோல அனைத்து அமைச்சர்களும், துறைச் செயலாளர்களும், முதல்-அமைச்சர் எதிர்பார்க்கும் வகையில் தங்கள் பணிகள் இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். மொத்தத்தில் லஞ்ச, ஊழலற்ற ஒரு வெளிப்படைத்தன்மையான அரசு தன் முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.