சென்னை,
தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் செயல்படுத்தி வரும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தவெக ஆட்சியிலும் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாக இது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான தயாரிப்பு பணிகளை அரசு தொடங்கியுள்ளது. வேட்டி, சேலைகள் கொள்முதல், உற்பத்தி, தரக் கட்டுப்பாடு மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட உள்ளன. பின்னர், நியாயவிலைக் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு அவை விநியோகிக்கப்படும்.
இந்தத் திட்டம் மூலம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2027 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய நிர்வாக அனுமதி வழங்கி, முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.