சென்னை,
சென்னையில் சரியாக நேற்று இரவு 7 மணிக்கு அடிவானத்தில் அடர்ந்த ஆரஞ்சு அல்லது செந்நிறத்தில் ஹண்டர்ஸ் மூன் காட்சியளித்தது.
அக்டோபர் மாதத்தில் முழு நிலவு தோன்றுவதை 'ஹண்டர்ஸ் மூன்' என்று அழைக்கிறார்கள். இதனை தமிழில் 'வேட்டைக்காரன் நிலவு' என்று மொழி பெயர்க்கின்றனர். சில ஊர்ப்பக்கங்களில், 'அரிசி நிலவு', 'அறுவடை நிலவு', 'சோள நிலவு' என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். இதற்கு காரணம், அறுவடைக்காலம் முடிந்து, வயல்வெளிகள் எல்லாம் வெற்று நிலமாக மாறியிருக்கும். அப்போது விலங்குகளை மக்கள் எளிதாக வேட்டையாடி சாப்பிட முடியும் என்பதால், அவர்கள் தங்கள் வழக்கத்தில் இன்றைய நிலவை 'ஹண்டர்ஸ் மூன்' என்று அழைக்கிறார்கள்.
2026-ம் ஆண்டு முழுவதும் தென்படும் 13 முழு நிலவு நாளான பவுர்ணமியில் இது 11-வது முழு நிலவு நாள். சென்னையில் சரியாக நேற்று இரவு 7 மணிக்கு அடிவானத்தில் அடர்ந்த ஆரஞ்சு அல்லது செந்நிறத்தில் காட்சியளித்தது. வழக்கமாக பவுர்ணமிக்கு அடுத்தடுத்த நாட்களில் நிலவு தோன்றுவதில் தாமதம் ஏற்படும். ஆனால், இந்த 'ஹண்டர்ஸ் மூன்' சூரியன் மறைந்த உடனேயே வானில் சிறிய அளவில் தோன்ற தொடங்கியது. இரவு முழுவதும் பிரகாசமான வெளிச்சத்தை வழங்கியது. நிலவு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும்போது பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வுடன் இந்த பவுர்ணமி இணைவதால், இது வழக்கமான நிலவை விட பெரியதாகவும், அதிக ஒளி வீசியும் தென்பட்டது. அளவில் பெரியதும், பிரகாசமுமான நிலவை சென்னையில் பொதுமக்கள் ஆர்வமாக பார்த்தனர்.