தமிழக செய்திகள்

எங்கமா போனே...தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்து கண்ணீருடன் காத்திருக்கும் சிறுமியின் தாய்

சிறுமியை மீட்டு தாயின் மடியில் சேர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விழுப்புரம்,

செஞ்சி அருகே காணாமல் போய் 22 நாட்கள் ஆன தனது மகளுக்கு தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்து, கண்ணீருடன் காத்திருக்கிறார் சிறுமியின் தாயார் பவானி.

22 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா என்ற ஹேமாவதி கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் மாயமானார். அவள் காணாமல்போய் இன்றுடன் 22 நாட்கள் ஆகிறது. ஏற்கனவே 10 நாட்கள் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தியதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார். இந்த வழக்கை கையில் எடுத்து இன்றுடன் 12 நாட்கள் முடிவடைந்து விட்டது.

டிராக்டர் டிரைவரிடம் விசாரணை

நேற்று ஆலம்பூண்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் டவர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது ஆய்வு செய்தனர். அதாவது கடந்த மாதம் 11-ந்தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் சுமார் 600 பேரின் செல்போன் அழைப்புகள் பதிவாகியுள்ளன.

அந்த அழைப்புகளை மேற்கொண்ட 600 பேரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் ஆலம்பூண்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி அதிகாரிகள் ஆலம்பூண்டியில் தற்காலிக முகாம் அமைத்து, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை

வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு பல நாட்கள் கடந்தும் சிறுமியைப் பற்றிய எந்தவொரு முன்னேற்றமும் இல்லாதது அவளது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. நேற்று தமிழகமே தீபாவளிப் பண்டிகைக்காக புது துணிகளை வாங்கியும் பலகாரங்கள் செய்யும் பொருட்களையும் வாங்கினர்.

நம்பிக்கையோடு காத்திருக்கும் சிறுமியின் தாய்

என் பிள்ளை நிச்சயம் உயிருடன் வருவாள்" என்ற மாறாத நம்பிக்கையோடு, எங்கமா போனே நீ..அவளுக்காக தீபாவளிப் புத்தாடை வாங்கி வைத்துவிட்டு, படுக்கையறையில் மகளின் புகைப்படத்தைப் பார்த்தபடி கண்ணீருடன் காத்துக்கிடக்கிறார் தாய் பவானி. பண்டிகை நாளில் அந்தத் தாய் வடித்த கண்ணீர், பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது.

சிறுமி மாயமான இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விரைந்து செயல்பட்டு, ஹேமலதாவை மீட்டு அவளது தாயின் மடியில் சேர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த மாதம் 12ம் தேதி அதிகாலை சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையிலும் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT