சென்னை,
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“தமிழகத்தை தொழில்துறை வளர்ச்சியில் வலுவான பாதைக்கு அழைத்துச் செல்வதாக 6 மாதங்களுக்கு முன்பு உறுதியளித்தோம். இன்று அந்த வாக்குறுதி கண்கூடான முன்னேற்றமாக மாறியுள்ளது.
இதுவரை 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1,14,811.91 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,32,771 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதில் முக்கியமான முன்னேற்றமாக, 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கெனவே முதலீட்டு உறுதிமொழியிலிருந்து செயல்பாட்டுக்கு மாறியுள்ளன. இதன் மூலம் ரூ.59,485 கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 82,728 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது 74.1 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதைக் காட்டுகிறது.
ஆட்டோமொபைல், ஜவுளித்துறை தொடங்கி மின்னணுவியல், விண்வெளி, பாதுகாப்புத்துறை, மருந்து உற்பத்தி மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் எனப் பல்வேறு துறைகளிலும், பல்வேறு பகுதிகளிலும் இந்த வளர்ச்சி முன்னேற்றம் காணப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறும் தொழில் சூழலை உருவாக்கி வருகிறோம்.
அதேசமயம், தமிழக மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறோம். தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே எங்களது இலக்கு. அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து உழைப்போம். இந்த இலக்கு நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.