கோவை,
தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இன்று வரை ரூ.9 லட்சத்து 29 ஆயிரம் கோடியாக கடன் உள்ளது. அடுத்த 2026-27 நிதியாண்டு முடியும் போது மொத்த கடன் ரூ.10 லட்சத்து 62 ஆயிரம் கோடிக்கு செல்லும்.
ஒரு ஆட்சி என்றால் கடனை குறைக்க வேண்டும். இது, கடனை அதிகரிக்க கூடிய ஆட்சியாக தான் உள்ளது. கடந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் வருவாய் ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 569 கோடி ஈட்டுவோம் என்று கூறினார்கள். ஆனால் ரூ.3 லட்சத்து 9 ஆயிரம் கோடிதான் வருமானத்தை ஈட்டி உள்ளார்கள். இதன்மூலம் ரூ.22 ஆயிரம் கோடி குறைவாக வருமானம் ஈட்டி உள்ளார்கள்.
இது வருமானம் இல்லாத அரசு. மேலும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடிய அரசு என்பது உறுதியாகிறது. உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி அறிவித்து உள்ளார்கள். கடந்த பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது ரூ.11 கோடி தான் அதிகம். கோவில்கள் திருப்பணி செய்வதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,100 கோடி செலவு செய்யப்பட்டதாக பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.82 கோடி மட்டுமே செலவு செய்துள்ளார்கள். ரூ.8,100 கோடி செலவு செய்தது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு வந்து உள்ளதை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஏற்றுக் கொள்கிறார். மத்திய அரசு பட்ஜெட் அறிவிக்கும் போது வீடு வீடாக சென்று முட்டை கொடுத்தார்கள். ஆனால் தற்போது தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு முட்டையை தான் கொடுத்திருக்கிறார்கள்.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். ஆனால் மத்திய அரசு திட்ட அறிக்கையை மாற்றிக்கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். அவ்வாறு கேட்டு 5 மாதங்கள் ஆகியும் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. காங்கிரஸ் தற்போது குழப்பத்தில் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தானே ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு இருக்கும்.
உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2 சதவீதம் குறைந்துள்ளது. ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் கைவினைத் திட்டத்தில் வெறும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தான் பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க.வின் பட்ஜெட் சுயபுராணம் தான், மக்களுக்கு பிரயோஜனமாக பட்ஜெட்டில் எதுவும் இல்லை. தோழி விடுதிகள், கலைஞர் கனவு இல்லம் திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்களே ஆகும். மத்திய அரசு யாரையும் மாற்றந்தாய் மனப்பான்மையோடு அணுகவில்லை. திமுக ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 3 சதவீதம் மட்டுமே வேளாண் துறை வளர்ச்சி அடைதுள்ளது. வேளாண் மக்களின் வயிற்றில் அடிக்க எதற்கு தனியாக பட்ஜெட்.
நடிகை குறித்து பேசியதற்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.