தமிழக செய்திகள்

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கே என்பதில் உறுதி தேவை: அன்புமணி

தேடல் குழு அமைக்க ஆலோசனை வழங்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்கக் கூடாது என்றும், முழுநேர துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியையும் சேர்க்க வேண்டும் கவர்னர் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றப் பட்டுள்ள நிலையில், தேடுதல் குழுவின் தன்மையை தீர்மானிக்க கவர்னர் அழுத்தம் தருவதை ஏற்க முடியாது.

முதல்-அமைச்சர் விஜய்க்கு நேற்று எழுதியக் கடிதத்தில் இந்தக் கருத்துகளை வலியுறுத்தி உள்ள கவர்னர், இந்த சிக்கலுக்கு இருதரப்பு கலந்தாய்வு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் தீர்வு காண முடியும் என்றும், தாம் பரிந்துரைத்தவாறு தேடல் குழு அமைக்கப்படுவதற்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். கவர்னரின் நிலைப்பாட்டில் புதிதாக எதுவும் இல்லை.

2023-ம் ஆண்டு செப்டம்பர் 6, 2025-ம் ஆண்டு மார்ச் 11, 2026-ம் ஆண்டு பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் அப்போதைய ஆளுனர் ஆர்.என்.இரவி கூறியதைத் தான் இப்போதைய கவர்னர் இப்போது தெரிவித்துள்ளார். இது துணை வேந்தர் நியமன சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, இந்த சிக்கலை மூன்று ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியாகும். இதில் அரசு ஒருபோதும் சிக்கிக் கொள்ளக் கூடாது.

தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும்? தேடல் குழு எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை வழங்கவோ, ஆணை பிறப்பிக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு தனித்தனிச் சட்டங்கள் உள்ளன. அவற்றின் அதனடிப்படையில் மட்டும் தான் தேடல் குழுவை அமைக்க முடியும். அரசின் பிரதிநிதி, கவர்னரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்க பல்கலைக்கழக சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரையோ, வேறு உறுப்பினரையோ சேர்ப்பது சட்டவிரோதம். அதை அனுமதிக்க முடியாது.

இந்த சட்டங்களின் மூலமும், புதிதாக இயற்றப்பட்ட துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தின் மூலமும் அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவெக அரசு உணரவில்லை. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து, சாதகமானத் தீர்ப்பைப் பெற்றாலே இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

ஆனால், அதை செய்வதற்கு பதிலாக கவர்னரிடம் பேச்சு நடத்தி இந்த சிக்கலுக்கு தீர்வு காண முயல்வதாக அறிவித்ததாலும், பல்கலைக்கழக சட்டங்களுக்கு எதிரான வகையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடல் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்த தயாராக இருப்பதாகவும் அரசு கூறியது தான் சிக்கலுக்குக் காரணம்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 பல்கலைக்கழகங்களில் 19 பல்கலைக்கழகங்களில் முழுநேர துணை வேந்தர்கள் இல்லாத நிலையில், புதிய துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதேநேரத்தில் தமிழக பல்கலைக்கழக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமன நடைமுறையில் உள்நுழைப்பது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். இதில் பின்வாங்கவே கூடாது.

எனவே, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் கவர்னரின் ஆலோசனைகளை ஏற்கக் கூடாது. தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை சேர்க்கக் கூடாது. மாறாக, அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வரவுள்ள துணைவேந்தர்கள் நியமன வழக்கை விரைவாக முடித்து, துணைவேந்தர்களை தமிழக அரசே நேரடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT