சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
“ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்” என்பது சட்டமேதை அம்பேத்கரின் மணி வாசகங்களில் ஒன்று.
முந்தைய திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட பத்து மசோதாக்கள் மீது அப்போதைய கவர்னர் ஆர்.என்.ரவி எந்தவிதமான முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தது சட்ட விரோதமானது என்று அதிரடியான தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு தன்னுடைய தீர்ப்பின் இறுதியில் பாபா சாகேப் அம்பேத்கரின் மேற்கண்ட வாசகத்தை மேற்கோள்காட்டி தீர்ப்பை நிறைவு செய்திருந்தது.
கவர்னர் கிடப்பில் போட்டு வைத்திருந்த பத்து மசோதாக்களில் தமிழ்நாட்டில் இயங்கும் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு கவர்னருக்கு பதிலாக மாநிலத்தின் முதல்வரே வேந்தராக இருப்பார் என்ற மசோதாவும் ஒன்று.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும். கவர்னர் திருப்பி அனுப்பிய அதே மசோதாவை சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தால் அரசியல் சட்ட வரம்பிற்கு உட்பட்டு அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒருவேளை ஜனாதிபதிக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டால் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதா குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனாதிபதி பெயரால் மத்திய அரசு இந்த உத்தரவு குறித்து விளக்கம் கேட்டு மனு செய்தது. இதைத் தொடர்ந்து பெருமளவிலான அரசியல் சட்ட விவாதங்கள் நடைபெற்றன.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அப்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயனும் வரவேற்றிருந்தார். இந்த பின்னணியில் முதல்-அமைச்சரே பல்கலைக்கழக வேந்தர் என்பதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியதற்கு கண்டனம் எழுந்தது.
ஆனால் அவ்வாறு தான் கூறவில்லை என்றும், முதல்வர் முடிவெடுப்பார் என்று மட்டுமே கூறியதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் சமாளித்துள்ளார். மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு முன்வர வேண்டும். மாநிலங்களில் அரசு மாறலாம், ஆனால் மாநில உரிமைகள் என்பதும், கூட்டாட்சி என்பதும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளாகும். இதில் சமரசத்திற்கு இடமில்லை. மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.