தமிழக செய்திகள்

தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்துவதே அரசின் இலக்கு: அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதே தமிழக அரசின் முதன்மைக் கனவு என்று அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) மாநில அளவிலான தொழில் வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேசியதாவது:

தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி

"தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டியது நமது அடிப்படை நோக்கமாகும். இதற்காக அரசு மற்றும் தொழில்முனைவோர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

குண்டூசி முதல் கப்பல் வரை தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள்

தூத்துக்குடியைச் சுற்றுலாத் துறையில் மேம்படுத்தப்பட்ட நகரமாக மாற்றத் திட்டமிட்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக பூங்காக்கள், கடற்கரைப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நீர் விளையாட்டுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குண்டூசி முதல் கப்பல் வரை தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள் தூத்துக்குடியில் உள்ளதால், இங்குள்ள வ.உ.சி. துறைமுகம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் இங்கு பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளது. மேலும் உயர்தர சிகிச்சைக்காகப் பல்நோக்கு மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளது.

தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும்

காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி, தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்காகும். தொழில் வளர்ச்சியை உயர்த்த அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்; அதேபோல் தொழில் துறையினரும் தங்களின் பங்களிப்பை வழங்கி இந்தக் கனவை நனவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தொழில் வல்லுநர்கள் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்த பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தனர். நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் தேவராஜன், துணை தலைவர் முருகவேல், தமிழ்நாடு தலைவர் ஜெய் கிருஷ்ணன், தூத்துக்குடி தலைவர் முரளி கணேசன், துணை தலைவர் செந்தில்குமார் சுப்ரமணியன் உள்பட பல தொழிலதிபர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT