தமிழக செய்திகள்

பிஞ்சுக் கைகளில் அரசின் அன்பு பொன்னாக ஒளிரப்போகிறது - அமைச்சர் அருண்ராஜ் பெருமிதம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

மதுரை,

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழாவில் அமைச்சர் அருண்ராஜ் விளக்க உரையாற்றியதாவது;

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனாக நம் முதலமைச்சர் விஜய் சீர் வழங்க உள்ளார். பிஞ்சு கைகளில் நம் தமிழக அரசின் உறவு தங்க மோதிரமாக மின்னப்போகிறது. தமிழகத்தை சேர்ந்த சகோதரிகளுக்கு தாய்மாமனாக நான் இருக்கிறேன் என முதலமைச்சர் தரும் உறுதி தான் இந்த திட்டம்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை எங்கு தொடங்கி வைக்கலாம் என யோசித்தபோது மதுரையை தேர்ந்தெடுத்தது முதலமைச்சர் விஜய் தான். பாசத்திற்கு சொந்தக்காரர்களான மதுரைக்காரர்கள் இருக்கும் ஊரில் தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் சீர் வழங்கப்படுகிறது.

இந்தாண்டு அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22-ந்தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. தாயும் சேயும் வீடு திரும்பும்போதே தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு அன்புடன் வழியனுப்பப்படுவர்.

ஒவ்வொரு மோதிரமும் தனித்துவமான வரிசை எண், கள்ளத்தனமாகத் திறக்க முடியாத பாதுகாப்பான பேக்கேஜிங் வசதியுடன் தரப்படுகிறது. தாய்மையை கொண்டாடுவதும், அரசு சேவையில் மக்களின் நம்பிக்கையை பெறுவது, தரமான தாய், சேய் மருத்துவமே இத்திட்டத்தின் நோக்கம்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு முதற்கட்டமாக 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றால் ஆகும் செலவு ரூ.1,412 ஆனால் தனியார் மருத்துவமனையில் ரூ.69,914 செலவு. அரசு மருத்துவமனையில் குழந்தை பேறு குறைந்த நிலையில் அதனை மீட்டெடுத்து முறையாக சிகிச்சை வழங்குவதற்கு இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்து ஒவ்வொரு தாயும் மரியாதை மற்றும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவர். தமிழக மக்களே உங்கள் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என அழைக்கிறோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT