சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே கவர்னர் வேலையாக வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தப்படுவதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியது தவறான தகவல் ஆகும். தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது.
பா.ஜ.க.வின் கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டிய அவர் கவர்னராக உள்ளார். பா.ஜ.க.வின் ஊதுகுழல் அவர். பல்வேறு மாநிலங்களுடன் நல்லுறவு கொண்டுள்ள தமிழகம், அங்குள்ள முதல்-மந்திரிகளை தமிழகம் அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளது. தமிழ்நாடு தனித்து நிற்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தேர்தல் வருகிறது என்பதற்காக கவர்னர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும், அதுவே பலம் என்று நினைக்கும் கட்சி தி.மு.க.
மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதிதரவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம். மாநிலங்களில் 2 அதிகார மையங்கள் இருக்கக்கூடாது என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது. இந்தியை வைத்து மலிவான அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தமிழ்நாட்டுக்கு இல்லை. மொழிவாரி சிறுபான்மையினருக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் இல்லை என்ற கவர்னரின் கருத்து தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.