சென்னை,
வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்கும் பாதுகாப்பு அறைக்கு தேர்தல் முடிந்து மூன்று நாட்களுக்கு பின் அரசியல் கட்சி பிரமுகர்கள் பார்வையிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது
தவெக தேர்தல் மேலான்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு அறைக்கு நேரில் பார்வையிட வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், திமுக தேர்தலில் தோல்வியடைவதற்கு முன் ஒவ்வொரு முறையும் வன்முறையில் ஈடுபடுவது வழக்கமான விஷயம் தான், துறைமுகம் தொகுதியில் தேர்தல் நடைபெற்ற அன்று மாலை 5 மணி அளவில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு 30 ரவுடிகளுடன் வந்து வன்முறையில் ஈடுபட்டார். தவெக வேட்பாளர் அசோக் குமார் மீது தாக்கியதில் அவர் காயமடைந்தார். அவருடன் இருந்த வெற்றி என்பவர் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.
சைதாப்பேட்டையில் உள்ள தவெகவை சார்ந்த வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. திமுகவினர் நம்பியது வாக்குக்கு ரூ.5,000 கொடுப்பதை தான். தவெக தலைவர் மாற்றத்தை உருவாக்க கட்சி ஆரம்பித்தார். அவரது வழியில் தவெக வேட்பாளர்கள் அனைவரும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து தமிழகத்தில் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.