சென்னை,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்-அமைச்சரே இருக்க வேண்டும்” என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறியிருப்பது, மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும்.
கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அதில் பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்-அமைச்சரே இருக்கும் மசோதாவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.
நீண்ட நாட்களாக அந்த மசோதாக்கள் கிடப்பில் இருந்தன. கவர்னர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மசோதாக்கள் அனைத்துக்கும் ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது கவர்னர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த மசோதாக்கள் கவர்னரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் , உயர்கல்வித்துறை அமைச்சரான காங்கிரஸ் எம் எல் ஏ விஸ்வநாதன் “பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்-அமைச்சரே இருக்க வேண்டும்” என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறியிருப்பது, மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும்.
இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களை தேசிய கட்சிகளே ஆண்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மாநிலக் கட்சிகள் எப்படித் தொடர்ந்து ஆட்சி புரியலாம் என்ற குரோதத்தின் அடிப்படையில், உயர்கல்வித்துறை அமைச்சரான காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன், “தமிழ்நாட்டைத் தமிழர்கள் நிர்வகிக்கக் கூடாது” என்பதன் நீட்சியைத்தான் கூறியுள்ளார். மொத்தத்தில் டெல்லியிலிருந்து நேரடியாக தேசிய கட்சிகள் ஆள வேண்டும் என்ற எண்ணம்தான் இதன் பின்னணியில் உள்ளது. இதில் பாஜகவோ, காங்கிரஸோ அது முக்கியமல்ல என்பதுதான் உயர்கல்வி அமைச்சரின் கூற்று என குற்றம்சாட்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.