சென்னை,
மிசா வரலாற்றை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், சட்டம் - ஒழுங்கு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்து, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதிலளித்து, காவல்துறை நிர்வாகம் - காவல்துறையினருக்கு ஆற்றப்போகும் புதிய திட்டங்களை எடுத்துரைத்து, மக்கள் பணியாற்றிட வேண்டிய இடத்தில், முதல்-அமைச்சர், வெற்று அரசியல் மேடை போல் பேசியிருப்பது வருந்தத்தக்கது.
ஜனநாயகத்தை காப்பாற்ற மிசாவில் ஆயிரக்க்கணக்கான திமுக - தோழமை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள், எப்படி இருக்கின்றார்கள், உயிரோடுதான் இருக்கின்றார்களா? என்பது கூட தெரியாமல், பதைபதைப்போடும் தவிப்போடும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், நாள் கணக்கில் குடும்பம் குடும்பமாக காத்துக்கிடந்த வரலாறு , நாடறியும். ஜனநாயகத்திற்காக சிறை சென்று அடக்குமுறையை, அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட வரலாறு அது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது வெறும் தழும்பல்ல; ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அவர் ஏற்றுக்கொண்ட வலியின் வீர அடையாளம்; 'தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே !' என்ற புறநானூற்றுத் தாயின் வீரவரிகளுக்கு, வாழும் இலக்கணமான வரலாறு. அந்த வீரவரலாற்றைக் கேலி செய்வது, ஜனநாயகம் காக்கப் போராடிய ஒரு தலைமுறையின் தியாகத்தையே கேலி செய்வதாகும். மிசா வரலாறு நாடறியும், வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.