தமிழக செய்திகள்

முதல் நாளிலேயே தலைமைச்செயலகத்தில் அமைச்சர் கமலி காட்டிய மனிதநேயம்

அமைச்சரின் இந்த மனிதாபிமான நடவடிக்கை கோட்டையில் இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

சென்னை,

தமிழக தலைமை செயலகத்தில் நேற்று வழக்கமான பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாலையில் ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது வீடுகளுக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் தலைமைச் செயலக/சட்டமன்றப் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குத் திடீரென உடலில் நடுக்கம் ஏற்பட்டு, நிலைதடுமாறித் கீழே திடீரென விழுந்தார். அவருக்குத் கடுமையான வலிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து அங்கிருந்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் பதறியபடி இருந்தனர்.

அதே நேரத்தில், தனது துறை சார்ந்த பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்ட தவெக-வின் புதிய கால்நடைத் துறை அமைச்சர் எஸ். கமலி, அந்தப் பகுதியில் நிலவிய பரபரப்பைக் கவனித்துள்ளார்.

சூழலின் தீவிரத்தை உணர்ந்த அமைச்சர் கமலி, உடனடியாகத் தனது காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, பாதுகாப்புப் பணியாளர்களைத் தாண்டி அந்த ஊழியர் விழுந்து கிடந்த இடத்திற்கு விரைவாக ஓடிச் சென்றார். முதலுதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்திய அவர், அங்கிருந்த மருத்துவக் குழுவினரை அவசரமாகத் தொடர்பு கொண்டார்.மேலும், அந்த ஊழியரைத் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி, தனது முன்னிலையிலேயே அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். டாக்டர்களிடம் அந்த ஊழியருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, எளிய ஊழியர் ஒருவரின் அவசர நிலைக்குத் ஓடிவந்து உதவிய அமைச்சர் கம்லியின் இந்தச் செயல், தவெக அரசின் மீதும் அவர் மீதும் மக்களுக்கு இருக்கும் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. சமூக ஊடகங்களிலும் இந்தச் செய்தி வைரலாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் எளிய பின்னணி கொண்ட சாமானிய இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் முன்னுரிமை கொடுத்து அசத்தி வருகிறார் முதல்-அமைச்சர் விஜய். அந்த வகையில், நேற்று நடைபெற்ற மெகா அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் அமைச்சர் எஸ். கமலி. வெறும் 28 வயதே ஆன இவர், தமிழ்நாட்டின் தற்போதைய அமைச்சரவையிலேயே மிக இளவயது பெண் அமைச்சர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.