சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்து அறநிலையத்துறையை சீரமைக்க தவெக அரசு மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆய்வு செய்து, சுவாமி தரிசனம் செய்ய ரூ.4,000 லஞ்சம் வாங்கியோர் மீது இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தகுந்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்பிற்குரியது. தமிழகத்தில் சில திருக்கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளை தெளிவாக வெளிப்படுத்திய இச்சம்பவம், மனதில் சில கேள்விகளை எழுப்புகிறது.
1. முதலில், லஞ்சமாக பெறப்பட்ட ரூ.4,000-இல் அர்ச்சகர்களையும் ஊழியர்களையும் தவிர உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் வேறு யாருக்கும் பங்கில்லை என்பதை தவெக அமைச்சர் எப்படி உறுதி செய்தார்?
2. முந்தைய திமுக ஆட்சியில், அன்பளிப்பில் தொடங்கி குடமுழுக்கு வரை முறைகேடு நடந்து ஊழலின் உறைவிடமாக இந்து அறநிலையத்துறை மாறிவிட்ட நிலையில், துறை ரீதியாக என்னென்ன மாற்றங்களை புதிய தவெக அரசு கொண்டுவந்துள்ளது?
3. தரிசன கட்டணம் பெறும் திட்டத்தை "ஆன்லைன் ஸ்லாட்" எனும் புதிய பெயரில் அறிமுகப்படுத்தினால் மட்டுமே முறைகேடுகள் தடுக்கப்பட்டுவிடுமா?
உண்மையில், இந்து அறநிலையத்துறையை சீரமைப்பதை தனது முழுமூச்சாக அறநிலையத்துறை அமைச்சர் ஏற்றுக்கொள்ள நினைத்தால், முதலில் துறைரீதியான அடிப்படை மாற்றங்களை முன்மொழிய வேண்டும்! கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிந்து, மக்கள் முன்னிலையில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும், கோவில் பூஜை நிர்வாகத்தில் தலையிடும் இந்து அறநிலையத்துறையின் அதிகார மீறல்களையும் தடுக்க வேண்டும்.
திருச்செந்தூர் கோவிலை திருப்பதிக்கு ஈணையாக மாற்றும் வகையில், ஆன்லைன் வரிசை கண்காணிப்பு முறை போன்ற நவீன உக்திகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் விடுத்து ஆய்வு செய்வது, ரீல்ஸாக வெளியிட மட்டும் பயன்படுமே தவிர, எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவராது என்பதை தவெக அரசு உணர வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.