தமிழக செய்திகள்

ஒழுங்குமுறை விற்பனைக் கூட பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: மு.வீரபாண்டியன்

புதிய முறைக்கு பதிலாக பழைய நடைமுறையே தொடர வேண்டும் என போராடி வருகின்றனர்.

சென்னை,

ஒழுங்குமுறை விற்பனைக் கூட பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

வியாபாரிகள் வேலை நிறுத்தம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வரும் வியாபாரிகள், இன்று முதல் சந்தைக்கு வராமல் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இதுவரை இருந்து வந்த பணப் பரிவர்த்தனை முறையை இ - நாம் 1.0 (மின்னனு - தேசிய வேளாண் சந்தை) மற்றும் மெய்நிகர் கணக்கு முறையில் இருந்து வந்த நடைமுறையை இ நாம் 2.0 முறைக்கு மாற்றியதை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

புதிய இ நாம் 2.0 முறையில் பணம் அனுப்பினால், அது தவறான இடத்திற்கு மாநிலம் விட்டு மாநிலம் கூட சென்று விடுகிறது. அல்லது பண பரிமாற்ற விவரங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. செலுத்திய பணத்தை வியாபாரிகள் மீளப் பெறுவதற்கு பெரும்பாடு படுகிறார்கள். பல நாட்கள் காத்திருந்து இழப்புகளையும் சந்திக்கின்றனர்.

மத்திய அரசு

எனவே, புதிய முறைக்கு பதிலாக பழைய நடைமுறையே தொடர வேண்டும் என போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், ஒழுங்கு முறை விற்பனைக் கூட பணியாளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு தெரிவித்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரிகள் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைந்து தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT