தமிழக செய்திகள்

காவல் அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர் அதிகாரம் - அரசாணைக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளை இடைக்கால தடை

இதுபோன்ற அரசாணைகளுக்கு கோர்ட்டு ஏற்கனவே தடை விதித்திருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை,

மதுரையை சேர்ந்த நல்லதம்பி என்பவர் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக உள்துறை செயலாளர் கடந்த 2025-ம் ஆண்டு, காவல் அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர் அதிகாரம் வழங்கும் வகையில் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். துணை காவல் ஆணையர்களுக்கு நிர்வாக நடுவர் அதிகாரம் வழங்குவது சட்டவிரோதமானது.

பிணைப் பத்திர விதிமீறலுக்காக ஒருவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் நீதித்துறையை சார்ந்தது. காவல்துறைக்கு அந்த வகையிலான அதிகாரத்தைக் கொடுப்பது செல்லாது என்று கோர்ட்டு உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இதுபோன்ற அரசாணைகளுக்கு கோர்ட்டு ஏற்கனவே தடை விதித்திருக்கிறது. இந்நிலையில், இந்த அரசாணை எப்படி பிறப்பிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியதோடு, மேற்கண்ட அரசாணைக்கு தடை விதித்து, இந்த வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.