கோவை,
திருப்பரங்குன்றத்தில் கோர்ட்டு தீர்ப்பின்படி தீபம் ஏற்ற வேண்டும் என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“கோர்ட்டு தீர்ப்பு மாநில அரசுக்கு ஏற்புடையதோ, ஏற்புடையது இல்லையோ, எப்படி இருந்தாலும் அந்த தீர்ப்பை பின்பற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், தேர்தல் சமயத்தில் திருப்பரங்குன்றம் விஷயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அரசியலில் இருக்கும்போது நம்முடைய கருத்தை மக்கள் முன்னால் சொல்ல வேண்டும். திருப்புரம்குன்றம் போன்ற ஒரு முக்கியமான விவகாரத்தில தன்னுடைய கருத்து என்ன என்பதை சொல்ல வேண்டிய கட்டாயம் முதல்-அமைச்சருக்கு உள்ளது.
மத நல்லிணக்கம் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இஸ்லாமியராக இருக்கட்டும், கிறிஸ்தவர்களாக இருக்கட்டும், இந்துக்களாக இருக்கட்டும் எல்லோரும் சேர்ந்து பயணிக்க வேண்டும்.
ஆனால் திருப்புரமுன்றம் விவகாரத்தை பொறுத்தவரை, அந்த மலையில் தீபத்தை ஏற்றுவதற்கான அனுமதியை ஐகோர்ட்டு கொடுத்த பிறகும் அன்றைய தி.மு.க. அரசு அதை ஏற்கவில்லை. தி.மு.க.வின் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கையாக இருக்கலாம். ஆனால் இன்று ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகம் கூட அதே பாணியை பின்பற்றுவது ஏற்புடையது அல்ல.
தொடர்ந்து இதை சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாவே வைத்திருக்கிறார்கள். இதனால் 2 மதங்களுக்கு இடையில் தேவையில்லாத ஒரு பகைமையை மாநில அரசுதான் வளர்க்கிறது. திருப்பரங்குன்றத்தில தீபத் திருநாள் என்று தீபத்தை ஏற்றிவிட்டால் முருகனை வழிபடுகிறவர்கள் வந்து பார்த்துவிட்டு கிளம்பிவிடுவார்கள்.
பின்னர் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஆனால் தீபத்தை ஏற்ற விடமாட்டேன் என்று சொல்லி பகைமை உணர்வை தமிழ்நாட்டில விதைப்பது யார்? இதனால் காவல்துறையினருக்கும் தேவையில்லாத அழுத்தம் ஏற்படுகிறது. எனவே கோர்ட்டு தீர்ப்பின்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.