தேனி,
தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில், வனவிலங்குகள் மற்றும் நச்சுப்பாம்புகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. அங்கு நிலவிய கடினமான சூழல்களுக்கு இடையே, ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக் 1887-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி அணை கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார்.
சுமார் 9 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் 1895-ம் ஆண்டு நிறைவடைந்தன. இதன் மூலம் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கான முக்கிய நீராதாரம் உருவானது.
முல்லைப்பெரியாறு அணை கேரள மாநில எல்லையில் அமைந்திருந்தாலும், அதன் பராமரிப்பு மற்றும் நீர்ப் பயன்பாடு தொடர்பாக தமிழ்நாட்டுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
அணையில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக, 1886-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. திருவிதாங்கூர் தரப்பில் திவான் ராம் அய்யங்காரும், சென்னை மாகாணத்தின் சார்பில் ஜான் சைல்டு ஹானிங்டனும் இதில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, 999 ஆண்டுகளுக்கு அணை நீரை தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ளவும், அதற்காக கேரளாவுக்கு குத்தகைத் தொகை வழங்கவும் நிபந்தனைகள் வகுக்கப்பட்டன.
இந்த ஒப்பந்தம் 1970-ம் ஆண்டு மே 20-ந்தேதி புதுப்பிக்கப்பட்டது. அப்போது ஏக்கருக்கு ஆண்டுக் குத்தகைத் தொகை ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டது. மேலும், முல்லைப்பெரியாறு அணை நீரைப் பயன்படுத்தி தமிழ்நாடு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கேரளாவுக்கு வழங்குவதற்கான கட்டணம் உள்ளிட்ட நிபந்தனைகளும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றன.
இந்நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகி 140 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
தேனி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 979 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 2,925 மில்லியன் கனஅடியாக உள்ளது.