தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் ஒளிரப்போவது தீபம் அல்ல.. பக்தர்களின் வெற்றிச்சுடர் - நயினார் நாகேந்திரன்

சுப்ரீம் கோர்ட்டின் நியாயமான தீர்ப்புக்கு நன்றி என நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

இந்து சமய அறநிலையத் துறை எதற்காக இருக்கிறது? கோயிலை பராமரிப்பதற்காக இருக்கும் அறநிலையத் துறை தீபம் ஏற்ற வேண்டாம், பூஜை வேண்டாம் என்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு சரியாக அணுகி இருந்தால் இவ்வளவு பெரிய எழுச்சி வந்திருக்காது. அரசின் அணுகுமுறை ஒவ்வொருவரின் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மலை மீது செல்ல வேண்டாம்

"பாஜகவினர் யாரும் திருப்பரங்குன்றம் மலைக்கு அருகில் கூட போக மாட்டோம். தூரத்தில் இருந்தே கண்கொள்ளா காட்சியை பார்க்க வேண்டும் அவ்வளவுதான். வேற எந்த நோக்கமும், எண்ணமும் கிடையாது. தீபம் ஏற்றும்போது 10 அல்லது 50 பேர் போகிறார்கள். மலை மீது செல்ல வசதி இல்லை; யாரும் மலை மீது செல்லக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மனமார்ந்த நன்றி. நியாயமான தீர்ப்புக்கு நன்றி. வருகின்ற காலங்களில் அது எப்படி இருக்கும் என பார்ப்போம்"

'அகல் விளக்கு ஏற்றவும்"

இன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் ஒளிரப்போவது வெறும் தீபமல்ல; முருக பக்தர்களின் வெற்றிச் சுடர்! சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளால் இத்தனை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்த தீபத்தூண் பிரகாசிக்கப் போவதை கொண்டாடும் விதமாகவும், இரும்புக்கரம் கொண்டு நீதியை நிலைநாட்டிய நீதித்துறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இன்று மாலை நமது இல்லங்களில் மாக்கோலம் இட்டு, அகல் விளக்குகள் ஏற்றுவோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT