தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யை கவர்ந்த குட்டி போலீஸ் - யார் அவர்?

அந்த சிறுவன் ஏனைய போலீஸ் அதிகாரிகள் போல், முதல்-அமைச்சர் விஜய்க்கு நேர் எதிரில் நின்று அவருக்கு சல்யூட் அடித்தார்.

சென்னை,

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற பெயரில் மாநில அளவில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, அனைவரையும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்கச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுத்து ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு 2026-ம் ஆண்டுக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்

அதில், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யான சந்தீஷ் ஐ.பி.எஸ்.-ம் ஒருவர். பதக்கம் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். பள்ளி செல்லும் அவருடைய மகன் ஷன் முக் (4) உடன் வந்திருந்தார். போலீஸ் சீருடையில் வந்த அந்த சிறுவன், முதல்-அமைச்சர் விஜயை பார்த்தவுடன், தானும் மேடைக்கு வருவதாக தந்தையிடம் அடம்பிடித்தார்.

முதல்-அமைச்சருக்கு சிறுவன் சல்யூட்

மகனுடன் மேடை ஏறிய எஸ்.பி.சந்தீஷிடம் விசாரித்த முதல்-அமைச்சர் விஜய், அவருடைய மகனை கையில் தூக்கிக் கொண்டார். சில வினாடிகள் சிறுவனிடம் பேசிய அவர், பின்னர் கீழே இறக்கிவிட்டார். அந்த சிறுவனும் ஏனைய போலீஸ் அதிகாரிகள் போல், முதல்-அமைச்சர் விஜய்க்கு நேர் எதிரில் நின்று அவருக்கு சல்யூட் அடித்தார். பதிலுக்கு சிரித்துக்கொண்டே முதல்-அமைச்சர் விஜய்யும் சல்யூட் அடித்தார். அதன்பின்னர், சிறுவன் உற்சாகமாக தனது தந்தையுடன் மேடையை விட்டு கீழே இறங்கினார்.

குட்டி போலீஸ் மேடை ஏறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.