தமிழக செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்.. யாருக்கு என்ன பிரயோஜனம்? போஸ் வெங்கட் காட்டம்

அரசால் அறிவிக்கப்படும் ஒரு திட்டம் என்பது ஒரு தலைமுறைக்கே அவசியமானதாக அவசியமுள்ளதாக இருக்க வேண்டும் என போஸ் வெங்கட் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

“தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” இது என்ன திட்டம்?.. யாருக்கு பிரயோஜனம்?.. இது வெரும் கவர்ச்சி திட்டம்.. மக்களை வெருமனே ஏமாற்றும் திட்டம்.. மக்கள் விழித்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். என இயக்குநர் போஸ் வெங்கட் பதிவிட்டுள்ளார்.

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் விஜய் தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்த திட்டத்தை இன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.

25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று, முதற்கட்டமாக 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 2026-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த தகுதியான குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய், மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு மற்றும் தாய்-சேய் நலப் பிரிவில் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் குறித்து நலம் விசாரித்தார்.

மக்களை வெருமனே ஏமாற்றும் திட்டம் - போஸ் வெங்கட்

இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த “தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” மக்களை வெருமனே ஏமாற்றும் திட்டம் என தனது எக்ஸ் தளத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அரசால் அறிவிக்கப்படும் ஒரு திட்டம் என்பது ஒரு தலைமுறைக்கே அவசியமானதாக அவசியமுள்ளதாக இருக்க வேண்டும்.. ( நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி,அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் ) இப்படி பல..

“தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” இது என்ன திட்டம்?.. யாருக்கு பிரயோஜனம்?.. இது வெரும் கவர்ச்சி திட்டம்.. மக்களை வெருமனே ஏமாற்றும் திட்டம்.. மக்கள் விழித்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT